0

கோடி சுவாமிகள் புரவிபாளையம்..தொடர். 3









கைமேல் பலன்!
     அன்று சுவாமிகளைத் தரிசித்து விட்டு புரவிபாளையத்தை விட்டு கிளம்பிய போது மாலைப் பொழுது மறைந்து இருள் சூழத் தொடங்கி இருந்தது. அந்த இருள் நமது மனதில் புகவில்லை. அங்கு முன்னிலும் பிரகாசம்தான் இருந்தது.


முதலில் சந்தித்தவர்!
     சுவாமிகளை முதன் முதலாக 1940ம் ஆணடில் நேரில் கண்டவர் பற்றிய விபரம் கிடைத்தது. அவர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற திரு என். வரதராஜீலு.

     நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, நாம் வந்த நோக்கம் பற்றி கூறியதும் ஆர்வத்தோடு எழுந்து வந்து நம்மை  அரவனைத்து வரவேற்றார்.
       
  மண்டபத்திலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள ரயில்வே பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அச்சமயம் 1940 சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. துறைமுகம் , கப்பல் கட்டும் பகுதி இவற்றைக் கண்காணிப்பது என் பொறுப்பு.

தினமும் மண்டபத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு இரயிலில் சென்று வருவேன். அப்பொழுது தனுஷ்கோடி இரயில் நிலையத்திலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் மேற்கு திசையில் அந்தோணியார் கோவில். அருகில் ஒரு சிறு மேடை.  அதில் ஒருவர் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் காட்சியைக் கண்டேன்.

            அவரை நேரடியாகச் சந்தித்து விடுவது என்ற சங்கல்பத்துடன் அடுத்த நாள் புறப்பட்டேன். ஒற்றைக்காலில் தவம் புரியும் நிலையில் உள்ளவரைச் சுற்றி வந்து கும்பிட்டேன். அவருக்கு எதிரே அமர்ந்து உற்றுப் பார்த்தேன்.

           ஒரு மணி நேரம் நகர்ந்தது. அப்பொழுது அவர் ஒற்றைக்காலில் தவம் கலைந்து இருகால்களையும் புவியில் பதித்து நடக்கத் தொடங்கினார். எங்களால் ஓடிச்சென்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை.
     கடல்நீரைச் சமீபித்ததும் நன்றாகத் திரும்பி பின் தொடர்ந்து சென்ற என்னை உற்று நோக்கினார். நான் ஆடிப்போய் நின்றிருந்த சமயம் பேசினார்.

இங்கு நான் நின்றிருந்த இன்று உன்னைக் கண்டேனப்பா. இங்கு கோடான கோடி மக்கள் வந்து போனார்கள். என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நீ சிரத்தை எடுத்துக் கண்டுபிடித்தாய்என்று கூறியவர் சற்று தாமதித்து மீண்டும் தொடர்ந்தார்.

            வருகிற 15ம் நாள் பவுர்ணமியன்று உன் இல்லம் வருகிறேன் என்று கூறினார். ஆகட்டும் குருதேவா என்று மன நிறைவோடு கூறி விடைபெற்றேன்.அன்று முதல் தினமும் தனுஷ்கோடி வந்து சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டிவிட்டு வருவேன்.அவர் என்னிடம் எதுவும் பேச மாட்டார். பலகாரம் ஊட்டுவதோடு சரி.
கப்பல் வந்தது!
     சுவாமிகள் என் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பவுர்ணமி நாளும் வந்தது. ஒன்றரை மாதமாக தாமதமாகவே வந்து கொண்டிருந்த தனுஷ்கோடி ரெயில் அன்று வெகு சீக்கிரமாகவே வந்து விட்டது. ஏழரை மணிக்கு சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டினேன். ஒன்பதரை மணிவரை சுவாமிகள் என்னிடம் எதுவுமே பேசவில்லை. எனக்கு பயமாகப் போய்விட்டது. சுவாமிகள் என்னுடன் வரமறுத்து விடுவாரோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது கண்களை மூடிய நிலையில் சுவாமிகள் பேசினார். கப்பல் வருகிறதா பார்என்றார்.

     நான் எழுந்து சென்று கிழக்குப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். கப்பல் வந்து கொண்டு இருப்பது தொலைவில் புள்ளியாக தெரிந்தது?கப்பல் வருகிறது சுவாமிஎன்றேன்.
      சரி நீ போய் அந்தோணியார் கோவிலைச் சுற்றி வந்து பிரார்த்தித்து விட்டு வாஎன்றார்.

மகத்துவம்
     எனது கை கால்கள் லேசாக நடுங்கின. தட்டு தடுமாறிச் சென்று கோவிலைச் சுற்றி வந்து தரையில் நீள விழுந்து கும்பிட்டேன். இதைப் பார்த்த பாதிரியார். ஏன் இப்படி விழுந்து கும்பிடுகிறீர்கள்?என்று கேட்டார். சுவாமிகள் உத்தரவுஎன்று கூறினேன்.
ஓ! அவரா மகத்தானவர் என்று கூறினார்.
     நான் மீண்டும் சுவாமிகளிடம் வந்தேன். புறப்படுவோம் என்று கூறியபடி மேடையை விட்டு இறங்கி வந்தார். நடக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரே ஆனந்தம். எங்களைத் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் ஒரு நாய் ஓடி வந்தது.

      சுவாமிகள் நின்றார். நாயை ஏறிட்டு நோக்கினார். நாயும் நின்றது. “நான் சென்று வருகிறேன். நீ இங்கேயே இருந்து, காவல் காப்பாய்“ என்று சொன்ன மறுவிநாடி நாய் திரும்பி ஓடிவிட்டது.


     நாங்கள் ரெயிலில் ஏறி அமர்ந்தோம். அதில் எங்களைத் தவிர ஏறத்தாழ 50 பேர் இருந்தனர். மதியம் 12 மணிக்கு ரெயில் புறப்பட “பெல்“ அடித்தார்கள். உடனே எங்களைத் தவிர அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பேரும் மடமடவென்று இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டனர். சுவாமிகள் மெல்ல சிரித்துக் கொண்டார். இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds