0

கோடி சுவாமிகள் புரவிபாளையம்..தொடர். 2



மலர்க்குவியல்!
      மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து, சம்பங்கி என்று வகைவகையான மலர் மாலைகளும், எலுமிச்சங்கனிகளும், அவரது பாதார விந்தங்களில் குவிந்தபடி இருந்தன. இன்னொரு வினோதத்தையும் அங்கே கண்டு பூரிக்க முடிந்தது. நீண்ட நாளைக்குப்பின் நெருங்கிய உறவினரை காண வருவோர் பாசத்தோடு பட்சணங்கள் வாங்கி வருவார்கள் இல்லையா? அதைப்போல இங்கே சாக்லேட்டுகள், பொங்கல், ஜிலேபி, பழவகைகள், வீட்டில் பக்குவமாக சமைத்து எடுத்து வந்த பலகார வகைகள் போன்றவற்றை தாத்தா கொஞசம் சாப்பிடுங்கள் என்று உள்ளன்போடு ஊட்டிவிடும் பாங்கு. வேண்டாம் என்றால் அவர்கள் மனம் வேதனைப்பட்டு விடக்கூடாதே
என்பதற்காகக் கொடுத்ததை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் பரிவு. காலடியில் கண்ணீரோடு முகம் புதைத்து புலம்புவோர்க்கு புன்னகையோடு ஆசி கூறி அரவணைத்திடும் கருணை வௌளமாய் இப்படிக் குடும்பப் பாங்கான காட்சிகள் பல அங்கே அரங்கேறிக் கொண்டு இருக்க நமது முறை வருகிறது.

கலகலசிரிப்பு
      அவர் முன் நின்ற நம்மை, ஊடுருவிப் பார்கிறார். நாம் வந்த நோக்கம் பற்றி சொல்லாமலேயே அவர் புரிந்து கொண்டதைச் சில வினாடிகளுக்கு பின் உணர்ந்து திகைக்கிறோம்.வெண் முத்துக்களை வெண்கலத் தாம்பாளத்திலே கொட்டியதைப் போல கலகலவென்ற சிரிப்போசை அந்த தாழ்வாரமெங்கும் எதிரொலிக்கின்றது. அதை தொடர்ந்து அசரீரி வாக்கு போல சுவாமிகளின் குரல் ஒலிக்கின்றது.

       “நாடு கெட்டுப் போச்சு! நல்லா எழுது!! எல்லாம் படிப்பாங்க!!! எல்லாமே நலம்தான். ஜெயம்தான். கோடி கோடியாய் பெருகட்டும்“ என்று ஆசி கூறி முடிந்ததும் எலுமிச்சங்கனி ஒன்றை நம் கரத்தில் வைக்கிறார்.

      நமக்குப் பின்னால் பக்தர்களின் நீண்ட வரிசை. எனவே நாம் ஒதுங்கி நின்று அவர்களின் தரிசனத்துக்கு வழிவிட்டு கவனிக்கிறோம். ஏற்கனவே வந்து வேண்டியது நிறைவேறப் பெற்றவர்கள் 100ம், 50ம், 20ம்மாக தரும் ரூபாய் நோட்டுக்களை பொம்மையை ஆர்வத்தோடு வாங்கும் குழந்தையைப் போல வாங்கி முன்னும் பின்னுமாக திருப்பி பார்த்து விட்டு ஒரு சிரிப்பு. இந்த பணம்தான் மனித குலத்தை என்ன பாடெல்லாம் படுத்தி விடுகின்றது. என்று நினைத்துச் சிரித்து இருப்பாரோ?

யாமிருக்க பயமேன்!
அடுத்து வரும் பக்தரை உங்கள் இதயச் சுமைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ள சுமைதாங்கியாய் யாமிருக்க பயமேன். இறக்கி வையுங்கள் என்ற ரீதியில் பார்க்கிறார்.

     சென்ற ஆண்டு வரை கொடி கட்டிப் பறந்த குடும்பம், வியாபாரம் நொடிந்ததால் இன்று வீதிக்கு வந்து விட்ட வேதனையைக் கண்ணீரோடு அவர் இறக்கி வைக்க ஏற்கனவே பக்தர் கொடுத்துச் சென்றுள்ள பணம் அவர் கைக்கு மாறுகிறது.

தொடரும்...

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds