0

கோடி சுவாமிகள் புரவிபாளையம்..தொடர். 4


கப்பல் வந்தது!
சுவாமிகள் என் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பவுர்ணமி நாளும் வந்தது. ஒன்றரை மாதமாக தாமதமாகவே வந்து கொண்டிருந்த தனுஷ்கோடி ரெயில் அன்று வெகு சீக்கிரமாகவே வந்து விட்டது. ஏழரை மணிக்கு சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டினேன். ஒன்பதரை மணிவரை சுவாமிகள் என்னிடம் எதுவுமே பேசவில்லை. எனக்கு பயமாகப் போய்விட்டது. சுவாமிகள் என்னுடன் வரமறுத்து விடுவாரோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது கண்களை மூடிய நிலையில் சுவாமிகள் பேசினார். ”கப்பல் வருகிறதா பார்” என்றார்.

நான் எழுந்து சென்று கிழக்குப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். கப்பல் வந்து கொண்டு இருப்பது தொலைவில் புள்ளியாக தெரிந்தது?” கப்பல் வருகிறது சுவாமி” என்றேன்.
”சரி நீ போய் அந்தோணியார் கோவிலைச் சுற்றி வந்து பிரார்த்தித்து விட்டு வா” என்றார்.

மகத்துவம்
எனது கை கால்கள் லேசாக நடுங்கின. தட்டு தடுமாறிச் சென்று கோவிலைச் சுற்றி வந்து தரையில் நீள விழுந்து கும்பிட்டேன். இதைப் பார்த்த பாதிரியார். ”ஏன் இப்படி விழுந்து கும்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார். ”சுவாமிகள் உத்தரவு” என்று கூறினேன்.
“ஓ! அவரா மகத்தானவர்” என்று கூறினார்.
நான் மீண்டும் சுவாமிகளிடம் வந்தேன். புறப்படுவோம் என்று கூறியபடி மேடையை விட்டு இறங்கி வந்தார். நடக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரே ஆனந்தம். எங்களைத் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் ஒரு நாய் ஓடி வந்தது.

சுவாமிகள் நின்றார். நாயை ஏறிட்டு நோக்கினார். நாயும் நின்றது. “நான் சென்று வருகிறேன். நீ இங்கேயே இருந்து, காவல் காப்பாய்“ என்று சொன்ன மறுவிநாடி நாய் திரும்பி ஓடிவிட்டது.

நாங்கள் ரெயிலில் ஏறி அமர்ந்தோம். அதில் எங்களைத் தவிர ஏறத்தாழ 50 பேர் இருந்தனர். மதியம் 12 மணிக்கு ரெயில் புறப்பட “பெல்“ அடித்தார்கள். உடனே எங்களைத் தவிர அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பேரும் மடமடவென்று இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டனர். சுவாமிகள் மெல்ல சிரித்துக் கொண்டார். இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
பரிபூரணம்!

வீடு வந்து சேர்ந்ததும் சுவாமிகள் செயல் எனக்கு வினோதமாக இருந்தது. அவருக்கு என் துணைவியார் இலை போட்டு சாப்பாடு பரிமாறினார். சுவாமிகள் சாப்பாட்டை தமது வலது கரத்தால் 3 முறை ஆசிர்வதித்து ”பரிபூரணம்” என்று இரு முறை சொன்னார். பிறகு அந்த உணவைப் பிசைந்து எனது குழந்தைகளுக்கு ஊட்டுமாறு சைகை செய்தார்.

குழந்தைகள் சாப்பிடுவதை பார்த்து விட்டு ”பரிபூரணம்” என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டார். இதை எல்லாம் நாங்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு இருந்தோமே தவிர விளக்கம் கேட்கத் தோன்றவில்லை.

இதை தொடர்ந்து எங்கள் வீட்டில் நல்லதும் அதிசயமும் மாறி மாறி நடக்கத் தொடங்கியது.எனது மருமகன் சஞசீவிக்கு மின்சார இலாகாவில் வேலையில் சேர ஆர்டர் வந்தது. நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். “மருமகனை வேலையில் சேர்த்து விட்டு வா“ என்று சுவாமிகள் எனக்குக் கட்டளையிட்டார்.

நானும் மாப்பிள்ளையும் சென்று திரும்ப 6 நாள் ஆகிவிட்டது. அந்த 6 நாட்களும் சுவாமிகள் ஆகாரம் எடுக்கவில்லை என்று மனைவி கூறினார். 7வது நாள் சமையல் அறையில் எனது மனைவி கஞ்சியை சுடச்சுட வடித்து வைத்து இருந்தார்.

சுவாமிகள் சமையல் அறைக்குச் சென்று ”கஞ்சியைக் கொடு” என்று கேட்டுள்ளார். ”சுவாமி கஞ்சி கொதிக்கின்றது” என்று சொல்ல கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிசயம் நடந்துள்ளது. கஞ்சியை எடுத்து ”சுடச்சுட மடக்மடக்கென்று சுவாமிகள் குடித்து விட்டு காலி பாத்திரத்தைத் தரையில் வைத்தபோது மனைவி பதறிப் போய்விட்டார்.

கஞ்சி குடித்து முடித்த சுவாமிகள் என் மனைவியைப் பார்த்து ”கோடி கோடியாக இரு. நான் கோடி வருஷம் வாழ்வேன்” என்று கூறினாராம்.
நான் வீடு திரும்பியதும் மனைவி இதை என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் மகிமையை அவள் நேரடியாகத் தெரிந்து கொண்டது பற்றி எனக்கு பூரிப்பாக இருந்தது. மறுநாள் சுவாமிகள் தனுஷ்கோடிக்கு பயணமானார். ஏற்கனவே இருந்த அதே மேடையில் தவக்கோலத்தில் நிற்கத் தொடங்கி விட்டார்.

தொடரும்..


Do you like this story?

No comments

Leave a Reply

Feeds