6 மாத காலம் சுவாமிகளை போய் பார்த்து பலகாரம் ஊட்டிவிட்டு வந்தேன். பிறகு என்னை சென்னைக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் என் மனம் எல்லாம் தனுஷ்கோடியையே சுற்றி வந்தது. 6 மாதத்திற்குப் பின் மீண்டும் திருச்சிக்கு மாற்றினார்கள். அங்கு சென்றதும் முதல் வேலையாகச் சென்று சுவாமிகளை மனம் குளிரத் தரிசித்தேன். அவரை என்னோடு திருச்சிக்கு அழைத்து வந்தேன். திருச்சியில் உள்ள ரெயில்வே காலனியில் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டது. அங்கு ஆஞ்சனேயர் மற்றும் கருடாழ்வார் கோவில் உள்ளது. சுவாமிகள் தமது தவத்துக்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார். அவரை தரிசிக்க பக்தர்கள் வரத் தொடங்கினார்கள்.”சுவாமிகள் எனக்கு மட்டுமோ அல்லது வேறு எந்த தனி மனிதருக்கோ சொந்தம் அல்ல” உலகத்துக்கு சொந்தம்.

அவர் சொல்லி நிறுத்தியதும் அவரது இரட்டை குழந்தைகள் (மகள்கள்) லட்சுமி, வசந்தா ஆகியோர் சுவாமிகளைப் பற்றி பாசத்தோடு நினைவு கூர்ந்தார்கள்
சுவாமிகள் எங்களை எல்லாம் ”தாத்தா... தாத்தா” என்றுதான் கூப்பிடுவார். அந்த சமயத்தில் நாங்கள் வறுமையில் இருந்தோம். சுவாமிகள் நமக்கு உதவக்கூடாதா என்றுகூட நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் நினைத்தது உண்டு. அது சுவாமிகளுக்கு தெரிந்து விட்டது போலும். எங்கள் தாயாரை மடியை வரித்து பிடிக்கச் சொல்லி தனது அங்கியில் கைவிட்டு 4முறை காசுகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். இவை எல்லாம் அப்போது இருந்த காலணாக்கள். எங்களுக்கு ஒரே வியப்பு. இதை எல்லாம் இத்தனை நாளும் அவர் எங்கே வைத்திருப்பார்? நடந்தால் சப்தம் கேட்டு இருக்க வேண்டுமே!

தரைக்குள் காசுகள்!
இந்த வியப்பில் மலைத்துப் போய் இருக்கும் போதே மேலும் ஒரு வியப்பு. தரையைத் தோண்டும்படி கூறினார். ஆவலோடு மண்ணைத் தோண்டினோம். அங்கும் காசுகள். அவற்றை எடுத்து அம்மாவின் மடியில் போட்டோம். அந்த சமயத்தில் அப்பா வீட்டில் இல்லை. அந்த பணத்தைக் கொண்டு கடன்களை அடைத்தோம். கொஞ்சம் பணம் மீதி இருந்தது.

அப்பா வந்ததும் இந்த அதிசயத்தை பரபரப்போடு கூறினோம். ஆனால் அவரோ எங்களைக் கோபித்துக் கொண்டார். ”சுவாமிகளுக்கு எதை எப்போது யாருக்கு எந்தளவுக்குச் செய்ய வேண்டும் என்பது தெரியும். மீதியுள்ள பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டார். ஆனால் சுவாமிகள் அந்த பணத்தை ஏற்கவில்லை. ”அம்மாவிடமே இருக்கட்டும்” என்று கூறி விட்டார்கள். அன்றையில் இருந்து சுவாமிகளிடம் நாங்கள் எதையுமே கேட்பது இல்லை. அதன்பிறகு எங்கள் குடும்பம் எல்லா வகையிலும் நல்ல நிலையிலும், நிம்மதியாகவும் இருந்து வருகிறது என்று கூறினார்கள்.

வரதராஜீலுவின் 2வது மகன் ராமகிருஷ்ணன்.
சுவாமிகளின் சாப்பாட்டு முறை பற்றி தமது வியப்பை வெளியிட்டார். ஊட்டிவிட்டால் மட்டும் இரண்டு கவளம் சாப்பிடுவார். இலையில் போட்டு வைத்தாலோ உணவை கையில் தொடாமல் 3முறை ஆசிர்வதித்து விட்டு ”பரிபூரணம்” என்று 3 தடவை கூறிவிட்டு எழுந்து விடுவார். வயிறாரச் சாப்பிட்டதை போன்ற திருப்தி அவர் முகத்தில் தென்படும். அவர் திருச்சியில் இருந்த போது சதா சர்வகாலமும் அனுமன் கோவிலில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த கோலத்தில் காட்சி அளிப்பதைத்தான் கண்டு உள்ளோம்.

வித்தியாசப் பேட்டி!
திருச்சியில் கோடி சுவாமிகள் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார். அந்த கால கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். அவரது காலடி தங்கள் இல்லத்தில் படவேண்டும் என்று விரும்பி அழைக்கும் பக்தர்களின் வீடுகளுக்கு அவர் செல்லத் தவறியது இல்லை. 

Read more »

Feeds